அருட்திரு யோகானந்த சுவாமிகள், வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியையே இலட்சியமாக கொண்டு வாழ்ந்து தாம் அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவ்வப்போது எழுதி வந்தார். அவற்றின் ஒரு பகுதியை பின்னர் மேட்டுக்குப்பம், சித்திவளாக திருமாளிகை முன்புறம் தம்மால் நிர்மாணிக்கப்பட்ட ஜோதித்தம்பம், தமிழ்மணி மண்டபம், திருஅருட்பாமணி மண்டபம்,* அறக்கூழ்ச்சாலை மற்றும் விடுதி ஆகியவற்றில் கல்வெட்டுகளாகப் பதித்தார். அவையே சுவாமிகளின் சுத்த சன்மார்க்க விளக்கம் (கல்வெட்டுப் பகுதி) என்று அறியப்படுகிறது.
மாயபோக வாழ்வின் இழிவை இடித்துக் காட்டியும், அருள்ஞான வாழ்வை இலக்காய்க் காட்டியும் சுவாமிகள் கூறும் விளக்கங்கள் புதுமையானவை; உணா்ச்சியூட்டுபவை; மெய்யுணர்வைத் தூண்டுபவை. அவை என்றென்றும் சுத்தசன்மார்க்க நெறிக்கு ஞானக்கருவூலமாகத் திகழும்.
திருவருட்பா மணிமண்டபத்தில் தம் அருள் விளக்கங்களுடன் வள்ளல் பெருமான் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல், திரு அருட்பா பாடல்கள் மற்றும் சில உபதேசப் பகுதிகளையும் கல்வெட்டுகளாக பதித்தார்.