அருட்திரு யோகானந்த சுவாமிகள் தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடி நகரில் கோவிந்தசாமி-அமிர்தம்மாள் என்னும் பெற்றோர்க்கு 1919ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் நாள் பிறந்தார்.
சுவாமிகள் சிறுவயதிலிருந்தே அன்பு, அறிவு, அஞ்சாமை, வாய்மை, இரக்கம், ஈகை முதலிய அருங்குணங்களை இயல்பாக பெற்றிருந்தார். தமது ஐந்தாவது வயதில், சிறுபிள்ளைகள் பங்கேற்று நடித்த மார்கண்டேயர் என்ற நாடகத்தை கண்ணுற்றபோது மார்கண்டேயரோடு தாம் ஒன்றிப் போன உணா்வினை அடைந்தார். மேலும் யார் உணவு வேண்டி வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் இருக்கும் உணவை அளவு பாராது கொடுத்து விடுவதால் வீட்டில் உள்ளோர்க்கு உணவு பற்றாது போய்விடுவதும் உண்டு.
பெற்றோர்கள் அவரை முறையாகப் பள்ளி சோ்க்கும் முன்னரே தாமாகவே பள்ளிக்குச் சென்று சேர்ந்து கொண்டு ஆரம்பக் கல்வி கற்று பின்னர் உயர்நிலைப் பள்ளியில் சோ்ந்தார். வெறும் ஏட்டுக்கல்வியில் அவர் மனம் ஈடுபாடு கொள்ளாததால் தமது 13ஆம் வயதில் பள்ளிச் செல்வதை விட்டு அச்சுக் கோர்ப்பது முதலிய தொழில்களில் ஈடுபட்டார். சுவாமிகள் தம் சிறு வயது முதலே ஆர்வமாக இருந்த ஓவியக் கலையில் ஈடுபடும் பொருட்டு தமது பதினேழாம் வயதில் சென்னைக்குச் சென்றார். ஆனால் ஊழ் வினையால் அது நிறைவேறாமல் போகவே சென்னையில் பெஸ்ட் கம்பெனி என்ற மோட்டார் கம்பெனியில் பணியில் சோ்ந்தார். அவ்வாறு சென்னையில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் இரவு தாம் தங்கியிருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று விண்ணில் தோன்றும் சூரிய, சந்திர, நட்சத்திரங்களையும் மண்ணில் தோன்றும் உயிரினங்களையும் கண்டு அதிசயித்து முற்பிறவி ஞானம் எல்லாம் ஒன்று திரண்டு இலட்சிய உணர்வு மேலோங்க, ”இவைகளெல்லாம் என்ன? நான் யார்? எங்கிருந்து வந்தேன்?” எங்கே செல்கிறேன்? என்று சிந்தித்தார். தொடர்ந்து ”இது காறும் எத்தனையோ பெரியோர்கள், மகான்கள், தெய்வப் பெரியார்கள் வந்து போயினா். அவர்கள் கண்டதும் பெற்றதும் முடிவாயிருக்குமாயின் அதை நான் பெறுதல் வேண்டும். அவர்கள் பெற்றது போக பெறாதது ஒன்று எஞ்சி இருக்குமாயின் அதனை அவர்கள் அறியார்; நானும் அறியேன்; நீ அறிவாய்; அதனை நான் பெறுதல் வேண்டும். இதுவே எனது இலட்சியம்” என்று தீா்மானித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து ஒருநாள் திருவொற்றியூரில் நடைபெற்று வந்த விழாவினைக் காண தம்முடன் தொழில் செய்து வந்த இருவருடன் சென்றார். அப்போது அவர்கள் வடலூர் இராமலிங்க சுவாமிகள் பெற்ற மரணமிலாப் பேரின்ப சித்தி வாழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைச் செவிமடுத்து அப்பெருவாழ்வை அடைவதையே தம் இலட்சியமாகக் கொண்டார்.
சுவாமிகளின் தொழில் திறத்தைக் கண்ட வேலூர் பஸ் நிறுவன அதிபர் ஒருவர் அவரை வேலூரில் உள்ள தம் நிறுவனத்தில் பணி செய்ய அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று சுவாமிகள் 1939ஆம் ஆண்டு வேலூர் வந்து அந்த நிறுவனத்தில் பணிக்குச் சோ்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் சுயமாக தொழில் செய்ய விரும்பி வேலூரிலேயே ஓரிடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பழுதடைந்த கார்களை சரி செய்து, வண்ணம் பூசி, புதியது போல பொலிவுறச் செய்து வந்தார். அவர் தொழில் திறம் பரவியது. பின்னர் தொழிலுக்கேற்ப பல இடங்களை மாற்றியுள்ளார்.
பகல் முழுக்க வேலை. இரவு முழுக்க உறக்கம். இப்படி இருந்தால் தாம், சென்னையில் கொண்ட இலட்சியம் எப்படி நிறைவேறும் என்று சிந்தித்த சுவாமிகள், பகல் பொழுதை வேலைக்காகவும் இரவுப் பொழுதை ஆன்மீக தேடலுக்காகவும் வகுத்துக் கொண்டார். சித்தர்களும் முனிவர்களும் காடுகளிலும் மலைகளிலும் வாசம் செய்வர் என்ற வழக்காறினால் அவர்களைத் தேடி இரவுப் பொழுதில் காடு மலைகளில் அலைந்தார். இவ்வாறு பதினைந்து ஆண்டுகள் சென்றன. அக்காலக் கட்டத்தில் சுவாமிகள் பல சித்தர்களையும், துறவிகளையும் முனிவர்களையும் சந்தித்து பழகியிருக்கிறார். ஆனால் சுவாமிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை. பின்பு சுவாமிகள் காடுகளில் அலைவதை விட்டு விட்டார். தாம் கண்ட பெரியோர்கள் யாவராலும் தீர்க்கமுடியாத சந்தேகங்கள் அனைத்தும் ஒருமுறை சிதம்பரம் கோயில் கோபுர வாயிலை அடைந்தபோது அறவே நீ்ங்கி இனி சந்தேகமே இல்லை என்றத் தெளிவைப் பெற்றார்.
சுவாமிகள் வேலூரில் தொழில் செய்து கொண்டிருந்தபோது வேதாந்தத்தை நாற்பது முறை ஓதி பயின்றவரும், தா்க்கத்தில் வல்லவருமான அறுபது வயதைக் கடந்த மாணிக்கம் என்பவர் அப்போது முப்பது வயது நிரம்பாத சுவாமிகளைச் சந்தித்து அவரை எப்படியாவது விவாதத்தில் வெல்ல வேண்டுமென பல நாள் பலமுறை பல விதமாக கேள்விகளைக் கேட்டார். ஆனால் அவை அத்தனைக்கும் சுவாமிகளிடமிருந்து தங்கு தடையின்றித் தக்க விடை பிறக்க அதைக் கண்டு மலைத்துப் போன மாணிக்கம் தம் தோல்வியை ஒப்புக் கொண்டு,”தாங்கள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே வேத சாத்திரங்கள் அனைத்தையும் கற்று உணா்ந்துவிட்டீர்கள். நான் இப்போது தான் பயில ஆரம்பித்திருக்கிறேன்” என்று கூறிப் பணிந்து சென்றார்.
ஒருமுறை கடுங்கோடையில் சுவாமிகள் பெரியம்மை நோயால் தாக்குண்டிருந்தார். அந்த நிலையிலும் தன்னைத் தேடி வரும் அன்பர்களுக்கு சோர்வின்றி விளக்கங்களைக் கூறிக் கொண்டிருந்தார். ஒருநாள் இரவு நோயின் கடுமை தாங்காது சோர்ந்து அமர்ந்திருக்கையில் உடல் பற்றிய நினைவு மறைந்து மனம் ஒடுங்கி சமாதி கூடியது. நீண்ட நேரம் அவ்விதமே தொடர்ந்தது. அப்போது சமாதி நிலை முடிவான பேறல்ல, உலகத்தில் வாழ்ந்து முடிவான பேற்றினைப் பெற வேண்டும் என்ற தெளிவு தோன்ற மிகவும் சிரமப்பட்டு புற உலக நினைவுக்கு வந்தார். வள்ளல் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி சமாதியில் கலவாது நால்வகை ஒழுக்கம், இரக்கம் பெற்று அருளை அடைந்து மரணமிலாப் பேரின்பப் பெருவாழ்வு பெறுவதே என்பதை அறிந்த சுவாமிகள், சமாதி நிலையை எங்ஙனம் முடிவான பேறாக ஏற்றுக் கொள்வார்?
வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்தையே தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட சுவாமிகள் தைப்பூசம் தவறாதீா்கள் என்ற வள்ளல் வாக்கிற்கிணங்க, ஆண்டுதோறும் (1963ஆம் ஆண்டு முதல் இறுதி வரை) தைப்பூசத்திற்கு வடலூர் சென்று அருட்பெருஞ்சோதி வழிபாடு செய்வதையும் தைப்பூசம் மூன்றாம் நாள் மேட்டுக் குப்பம் சென்று வள்ளல் பெருமான் சித்தி பெற்ற திருவறையைக் கண்டு வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டார். சில ஆண்டுகள் தைப்பூசம் விழா அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் திருப்பெருந்துறை மாணிக்கவாசக சுவாமிகள் கட்டிய கோவிலுக்கும் சென்று வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டார்.
1979ஆம் ஆண்டு வழக்கம் போல் தைப்பூசம் கண்டு வழிபட்டு, தைப்பூசம் அடுத்த மூன்றாம் நாள் வள்ளல் சித்தி பெற்ற திருவறையைக் கண்டு வழிபட மேட்டுக்குப்பம் சென்றார். அப்போது இதுவரை எவ்வுலகிலும் எவரும் பெறாத பேறாம் மரணமிலாப் பேரின்பப் பெருஞ்சித்தி பெற்ற வள்ளல் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட திருவறை, ஒட்டடை நீக்காமலும், வெள்ளைப் பூசாமலும் விழாக் கோலம் இன்றி இருந்ததைக் கண்ட சுவாமிகள் மனம் வருந்தி அப்போது அங்குக் காண நேர்ந்த ஊர் பிரமுகர்களிடம் இதுபற்றி விசாரித்தார். அதற்கு அவர்கள், “அதெல்லாம் உரியவர்கள் வரும்போது தானாக நடக்கும்” என்று சொன்னார்கள். ”அந்த உரியவர்கள் நாமாக ஏன் இருக்கக் கூடாது?” என்று சுவாமிகள் கேள்வி எழுப்பி, விழா செலவிற்கான வைப்புத் தொகையை வங்கியில் முதலீடு செய்து மேட்டுக்குப்பம் ஊர் மக்கள் விண்ணப்பத்துடன் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஒப்படைத்து அடுத்த ஆண்டு முதல் அவ்விழா சீரும் சிறப்புமாய் நடைபெற ஆவண செய்தார்.
சுவாமிகள் தமது அருள் அனுபவ விளக்கங்களுக்குச் சான்றாக மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையின் முன்புறம் ஜோதித்தம்பம் அமைத்தார். தொடர்ந்து அங்கு தமிழ்மணி மண்டபம், திருவருட்பா மணி மண்டபம், அறக்கூழ்ச்சாலை மற்றும் விடுதி ஆகியவற்றை அமைத்தார். தாம் கண்ட அனுபவ விளக்கங்களை அனைவரும் கண்டு உய்ய மேற்கண்ட அமைப்புகளில் கல்வெட்டுகளாகப் பதித்தார். இவ்வாறு சுத்த சன்மார்க்க நெறியையே தம் வாழ்வாகக் கொண்டிருந்த சுவாமிகள் இறை அனுபவத்திலேயே சதா காலமும் தோய்ந்திருந்தார். முதுமையும் நோயும் அவரைத் தாக்கினாலும் அவற்றால் தாம் தாக்குறாது எப்போதும் பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். சுவாமிகள் அவ்வப்போது அற்புதம் அற்புதம் என்று சொல்லி பரவசப்படுவதையும், குலுங்கி குலுங்கி சிரிப்பதையும் அருகிலுள்ளோர் யாவரும் காண்பர்.
சுவாமிகள் 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் (மார்கழி ஆயில்ய நட்சத்திரம்) தம் பூத உடலை உகுத்து அருள் ஞான மோன நிலையில் நிறைந்தார்.
சுவாமிகள், வள்ளல் பெருமானுக்குப்பின் சுத்த சன்மார்க்க நெறியையே தம் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து அருள் அனுபவத்தில் திளைத்து பூர்வ ஞானத்தையும் உத்தர ஞானத்தையும் தெளிவாக விளக்கி அருளிய ஒப்பற்ற அருள் ஞானி. அவர் அருளிய அருளனுபவ விளக்கங்களே அவர் பெற்ற பேறுக்கு சாட்சி.
(திரு. முத்துமாணிக்கம் ஐயா அவர்கள் எழுதிய வேலூர் ஐயா யோகானந்த சாமிகள் வாழ்வியல் சுருக்கம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது)