சடாந்த உகர உயிரே ஞானமாய், ஞான தேகமாய், சுத்த சன்மார்க்க தனிப்பெருங்கருணை அருளே அறிவாய், ஞான ஞானமாய், அகர அருட்பெருஞ்சோதியே உயிராய், உயிர்பெற்று எழுதலே உயிருடன் இறந்தவர் உயிருடன் எழுதலாகும். இதுகாறும் உயிர் உடம்பை உயிரெனக் கொண்டோம். இது தருணம் உயிரை உயிர் உடம்பெனக் கண்டு உயிர்த்தெழுந்தோம். இதுவே எட்டும் இரண்டும் எனும் அகர உகர உடம்பும் அகர உயிரும். அவ்வுண்மையே அருட்பெருஞ்சோதி.[55]
ஆதி பகவன் முதற்றே யுலகு கடந்து, அநாதியில் வாழ்வோம். சுழுத்தியில் சீவன் இருக்கும் நிலையே சீவநிலை. அந்நிலையைச் சாக்கிரத்தில் காண்பதே சீவன் முத்தி. நினைவே கனவு. இவ்வுலக வாழ்வைத் தவிர்க்க சுழுத்தியில் கண்ட காணாக் காட்சியைச் சாக்கிரத்தில் காண். அதுவே நானாய சீவன். அவ்வின்மையே மாயை. அந்நிலையே சமாதியெனும் ஆதி சமம். அதைக் கண்ட நிலையே சடாந்த சமரசம். அதுவே சித்தாந்த மோனம், வேதாந்த முடிவு.[68]
திருவருள் முன்னிலையில் மாமாயையின் ஏகதேசமே சீவன். பூரணமே மாமாயை. திருவருளின் ஏகதேசமே ஆன்மா, திருவருள் பூரணமே தனிப்பெருங்கருணை. தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்சோதி.. [73]
கண்ணை மூடினால் சீவக்காட்சி. இருள் மயம். கண்ணைத் திறந்தால் மாயக்காட்சி. இருளில் ஒளி. இதுவே இரவு பகல் எனும் மாயை. இடையில் கனவு. பகல் காட்சி எனது படைப்பா? இப்படியிருக்க நானென்ன? எனதென்ன? இதுவே மாயை. நானே மாயையாயிருக்க பொய் என்னிலும் வேறுளதோ? தனிப்பெருங்கருணை இலதாயின் எனது வாழ்வேது? சீவகாருண்ய ஒழுக்கமே பொய்யைப் பொய்யென மெய்யாக்கும். இதுவே மூப்பினர் இளமைபெறுதல். பொய் மெய்யானால் உயிர்மெய்யாகும். அதுவே உயிர்த்தெழல். உயிர் மெய்யானால் உயிருக்கு உயிர் தோன்றும்.[77]
சீவகாருண்ய ஒழுக்க இரக்கத்தால் இகம் பரமாகும். பரம்,பரம்பர சிதம்பரமாகும். பரம்பரம்,பராபர மௌனப்பெருவெளியாகும். பராபரம், தனிப்பெருங்கருணைத் தமிழாகும். தனிப்பெருங்கருணைத் தமிழ், அருட்பெருஞ்சோதி அகர உகரத் திருவருள் சமூக வண்ணமாகும். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அநாதி அகரத்திருவண்ணமாகும்.[110]
திருவருள் மலர்ச்சியே ஆன்மாக்கள். திருவருள் முன்னிலையில் தோன்றிய மாயை மலர்ச்சியே உலகெலாமாய இகபர சீவக்காட்சிகள். இரவில் தோன்றியபகலே உறக்க மயக்கம். அதில் தோன்றும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தியே மரணவாழ்வு. இறந்துகொண்டே வாழும் வாழ்வே கருப்புத்திரை. இதையறியாது வாழும் நாமே சீவர்கள். இம்மாயக்காட்சிகளைத் திரைகளெனக் காண்பதுவே ஆன்மஞானம்.[115]
சடாந்தமெனும் சீவ அந்தமே பொன்னம்பலம். அந்தாந்த ஆன்ம அறிவே சிற்றம்பலம். சடாந்தத்தைப் பூர்வமாக்கி, தான் உத்தரத்தில் நிற்பதுவே குருதுரியம். குருதுரியத்தைப் பூர்வமாக்கி தான் உத்தரத்தில் நிற்பதே சுத்தசிவதுரியம். சுத்தசிவதுரியத்தைப் பூர்வமாக்கி உத்தரத்தில் அருளாட்சிபுரிதலே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி சமூகவண்ணம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதியே திருவண்ணம்[117]
இறந்தவர் இறந்து, உயிருடன் இறந்தவர் விழித்தெழுந்து, அருளுடன் கூடிவாழ்ந்து, அருட்சோதி நடம் கண்டு, அருட்பெருஞ்சோதி ஆவதுவே அருட்பெருஞ்சோதி.[136]
இரவு பகலற்ற இடமே ஆன்மாவின் இருப்பிடம். இரவே சீவனின் உருவம். பகலே அறியாமை. மரணமே அவ்வுண்மை. இதுவே மாயை. சீவன் முத்தி பெறாது ஆன்ம அறிவு விளங்காது. மாயைத்திரை நீக்கமே ஆன்மஞான மௌனப் பெருவெளி. அருள்சோதி நடமே மரணமிலாப்பேரின்பப் பெருவாழ்வு.[136]
இகபர மாய போக வாழ்வைத் தவிர்க்க வாழும் வாழ்வே பொன்னம்பல வாழ்வு. பரம்பர ஞான வாழ்வே சிற்றம்பலவாழ்வு. பராபரமே ஆன்மஞான மௌனப் பெருவெளி. அதைக் கடந்த நிலையே குருதுரியம். அவ்வதீதமே சுத்த சிவ துரியம். அதுவே செப்பாத மேல்நிலை. செஞ்சுடர்ப்பூ பெற்றவரே மேல்நிலை மேல் அருள்சோதி காண்பார். அவரே மரணமிலாப் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வார்.[156]
கழிமல நீர் வழிவந்து புகுந்து, மலநீருடன் கூடியிருந்து வளர்ந்து மலநீர் வழிவந்து, பிறந்து வாழும் நானே மூப்படைந்து இறக்கும் மும்மலமே நானாயிருக்க என்னிலும் கழிக்கும் மலம் வேறுளதோ? மலம் புசித்து வாழும் மலமா மனிதன்? என்னே மதியீனம். கொடுப்பதும், பெறுவதும், ஆவதும், ஆண், பெண்ணாய மலமெனும் கழிவே. பிறப்பதும் அதுவே. இறப்பதும் அதுவே. பிறவா, இறவா என்னிலே, பிறந்து இறக்கும் காட்சியைக் காண்கிறேன். பிறக்கும் உயிரும், பிறவா உயிரும் அறிந்தவரே இறவா உயிர். தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதியே சமூக வண்ணம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதியே திருவண்ணம்.[167]
சிதம்பர இரகசியமே எழுதா ஏடு. அதுவே மௌனப் பெருவெளி. எழுதா ஏட்டில் எழுதும் எழுத்தே எழுதாமறை. தனிப்பெருங்கருணை திருவருளே எழுதாமறை. ஆன்ம அறிவெளியானவருக்கே எழுதாமறையெனும் ஊன்றியத் தமிழ் மாமறை எழுதப்படும். அதுவே செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருள்சோதி செலுத்தியிடல் வேண்டுமென்றார் வள்ளல் காண்.[170]
ஒவ்வொரு ஆன்ம உயிரிலும் முன்னிலையில் மாயத்திரையாய சீவக்காட்சித் தோன்றும். அதுவே நிழல் காட்சி. ஆன்ம அறிவெளியில் அருளொளித் தோன்றில் சீவனாய மாயத்திரைக் காட்சித் தோன்றாது போம். அதுவே சீவ விதேக முத்தி. அந்நிலைப் பெற்ற ஆன்ம உயிரே மௌனப் பெருவெளி. அதுவே எழுதாஏடு. அவ்வேட்டில் எழுதும் எழுத்தே அருளியக்கம், அதுவே ஓதாதுணர்தல். அவ்வியக்கமே அருள்நடம். அந்நடமே மரணமிலாப் பேரின்பப் பெருவாழ்வு. அதுவே அநாதி இயற்கை உண்மை அருள் நடம்.[173]
விதிவச வாழ்வனைத்தும் மாய வாழ்வே. விதி வசமான மதி மூடமே. விதி வசத்தினரனைவரும் அடிமைகளே. நாமும், நமதும் பிறர்வசம் உள்ளவரை நாம் அறியாமையே. இதுவே அறிவிலார் என்னுடையரேனுமிலர். அடிமையென்பது கீழ்மை. தூலகோள்களும், சூக்கும கர்த்தர்களும் நம்மை ஆட்டிப்படைப்பதென்றால் நாம் யார்? சடசித்தே நாம். அதுவே விதி மதி. இம்மாய வாழ்வை அழித்தவரே ஆன்ம ஞானி. ஆன்ம அறிவைப் பெற்றவரே அருளறிவைப் பெறுவார். அவரே வாழ்வார். இறந்தவர் வாழ்வே மாயை. அவரின் பிறப்பே இறப்பு. இதுவே ஆதி பகவன் முதற்றே யுலகு. அநாதி அருள் வாழ்வே உயிர்மெய் வாழ்வெனும் (13) மரணமிலாப் பேரின்பப் பெருவாழ்வு.[180]
முன்னிலையில் தோன்றுவதே மாயை. தன்னிலையே ஆன்மா. முன்னிலையற்று, தன்னிலைப் பெறுதலே மாயத்திரை நீக்கம். ஆசையற்றவர்க்கே முன்னிலை தோன்றாது தன்னிலை தோன்றும்.[196]
ஆசையே மூடம், ஆசையே அழிவு. ஆசையற்றவரே அறிஞர். ஆசையற்றவரே பிறவார். அறிவு தோன்றும் வரை உலகம் தோன்றும். அறிவு தோன்றினால் உலகம் தோன்றாது. நான் எதுவரை. உலகம் அதுவரை. நான் யாரென்று நான் அறியேன். அதுவே மாயை. நான் யாரென்று அறிபவன் ஆன்மா. அவனே இருப்பவன். இருப்பவன் வாழ்வான். இல்லாதவன் சாவான். இறந்து பிறக்கும் நானே மாயை. மாயையை அழிப்பவனே ஞானி.[219]